Ep..6. அதுக்கு இது சரிப்படு வருமா
காவ்யாவின் மனம் ராஜேஷிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உந்தித் தள்ளப்பட்டு கொண்டிருக்க, ராஜேஷிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
அதைக்கண்டு காவ்யாவின் முகம் மத்தாப்பு போல் பூத்தது.
“ஹலோ யாரு.?” என்று காவ்யா வேண்டுமென்றே அழைப்பது யார் என்று தெரியாதது போல் கேட்டாள்.
காவ்யாவின் குரலைக் கேட்ட ராஜேஷ் சில கணங்கள்
கள்ளுண்ட மந்தியாக மதி மயங்கிச் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனான்.
நான் நின்னா நடந்தா
கண்ணு உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே பெரும் காதல் கூடுதடி….
நா .முத்துக்குமாரின் கவிதை வரிகளை மனதிற்குள் எண்ணி மகிழ்ந்தான். ஒரே ஒருமுறை பார்த்துப் பேசிய பெண், தன்னை இவ்வளவு ஆக்கிரமித்து விட்டாளே!…என்று வியந்தான். ‘என்ன டி மந்திரம் போட்ட?’ என்று அவன் மகிழ்ந்தான்.
பிறகு,
“மேம் ராஜேஷ் பேசுற, காலைல மீட் பண்ணோமே.” என்று கூறினான்.
காவ்யாவிற்கும் ராஜேஷ் என்ற பெயரைக் கேட்டதுமே என்ன பேசுவது என்று புரியவில்லை. ஆனால், ஏதாவது அவனிடம் பேச வேண்டும் என்று உந்துதல் இருந்து கொண்டே இருந்தது,
இப்பொழுது தானே அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அவனே அழைத்துப் பேசுகிறானே!
இதுதான் டெலிபதியா …? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?…..என்ற திரைப்பட பாடல் வரிகள் அவள் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒலிக்கத் தொடங்கியது .
காவ்யாவின் மனம் முழுக்க அவளிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற பரிதவிப்பு அதிகமானது. ஆனாலும், பேச்சை எப்படித் துவங்குவது, என்ற தடுமாற்றத்தோடு ,
“சொல்லுங்க சார்” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
காவ்யாவின் முக வசீகரமும் அழகும் அவனைக் கட்டி இழுக்க அவளிடம் பேச வேண்டும் என்ற துடிப்பில்
ராஜேஷ், அவளை அழைத்து விட்டானே தவிர, அவளிடம் என்ன பேசுவது என்று யோசிக்கவே இல்லை. அவனும் தடுமாற்றத்துடன் ,
“மேம் …. நெட்வொர்க் எப்படி இருக்கு .?” என்று கேட்டான்.
ராஜேஷின் தடுமாற்றத்தை புரிந்து கொண்ட காவ்யா, படுக்கையில் சரிந்து, புன்னகைத்தபடியே,
“என்ன சார் இதுக்கு தான் கூப்பிட்டீங்களா.?” என்றாள்.
எதிர்ப்புறம் அமைதி நிலவ, ஐயையோ தான் கூறியதற்கு அவன் ஏதேனும் தவறான அர்த்தம் எடுத்துக் கொண்டானோ? என்று பதறியபடி ,
“சாரி சார் நான் சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்டேன், ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றாள் .
காவியா உடைய,
“என்ன சார் இதுக்கு தான் கூப்பிட்டீங்களா …?”என்ற வார்த்தைகள் ராஜேஷிற்கு அவளிடம் சகஜமாகப் பேசலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது.
அவளுக்கும் தன்னிடம் பேச வேண்டும் என்ற உந்துதல் இருப்பதாக ராஜேஷ் புரிந்து கொண்டான். காவ்யாவிடம் ஏதாவது சுவாரஸ்யமாகப் பேசனமுன்னு எதிர்பார்க்குற போல.’ என்று ராஜேஷ் நினைத்தான். சுவாரசியமாக என்ன பேசுவது அவளுடைய ரசனை என்னவென்று தெரியாமல் எதிலிருந்து தொடங்குவது.?
எப்படி தொடங்குவது? என்று தடுமாறினான்.
புதிதாக வந்திருக்கும் திட்டங்களைப் பற்றி விளக்குவது போல் அவளுடைய ரசனைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தபடியே,
“பரவால்ல மேடம், ஒரு விஷயம் கேட்கலாம்னு தான் கூப்பிட்ட.”
என்றான்.
அவன் ஏதோ தொழில் முறையில் தான் தன்னிடம் பேச அழைத்து இருக்கிறான் என்று, காவ்யாவின் துடிப்பும் உற்சாகமும் நொடிப்பொழுதில் குறைந்து.
” சொல்லுங்க சார்.”என்று சுவாரஸ்யமற்ற குரலில் காவ்யா சொன்னாள்.
“புதுசா ஒரு ஆப்பர் வந்து இருக்கு மேம். இதுக்கு 200 நீங்க ரீசார்ஜ் பண்ணிட்டீங்கன போதும். ஒன் இயருக்கு மூவிஸ் ,சாங்ஸ் ,ஆடியோ புக்ஸ் எல்லாமே ஃப்ரியா நீங்க என்ஜாய் பண்ணலாம்.” என்று அவன் அவளுடைய ரசனைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள தூண்டில் போட்டான்.
“எனக்கு மூவிஸ், சாங்ஸ் எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா, ஆடியோ புக்ஸ் பிடிக்கும். நிறைய புக்ஸ் ரிட் பண்ணுவேன்” என்று காவியா கூறினாள் .
“உங்களுக்குப் பிடிச்ச ரைட்டர் யாரு? என்ன மாதிரி புக்ஸ் எல்லாம் படிப்பீங்க.?” என்று ராஜேஷ் பேச்சைத் தொடர்ந்தான்.
அவன் தன்னிடம் பேசத்தான், அழைத்திருக்கிறான். தன்னிடம் பழக வேண்டும் என்று விரும்புகிறான். அவனுக்குத் தன்னை பிடித்து இருக்கிறது என்று காவ்யா உள்ளுர உணர்ந்து மகிழ்ந்தாள். அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் ரசனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் .அவனிடம் பழக வேண்டும் என்ற ஆசையில் பேச்சை நீட்டிக்கும் விதமாக,
“நீங்கக் கேக்கறத பாத்தா, உங்களுக்கும் புக்ஸ் ரீடிங் பிடிக்கும் போல இருக்கே!” என்றாள் .
இருவருமே இலக்கியத்தின் வாயிலாகத் தங்கள் ரசனைகளை ஒருவருக்கொருவர் மொழி பெயர்த்து, காதல் வளர்க்க தயாரானார்கள். காவ்யா ஆங்கில இலக்கியங்களும் ரஷ்ய இலக்கியங்களும் பிடிக்கும் என்றாள்.
ராகேஷ் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பிடிக்கும் என்றான்.
ராஜேஷ் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று நிறைய பேசினான் . பாரதிதாசனின் குடும்ப விளக்கில் வரும் கவிதை நாயகியைப் புகழ்ந்தான்.
கண்ணதாசனையும் , ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் வியந்து போற்றினான்.
காவியா ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தொடங்கி உலகின் தலைசிறந்த எழுத்தாளர் என்று போற்றப்படும் டால்ஸ்டாய், ஹோமர் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி வரை பேசினாள்.
“டால்ஸ்டாய் மாதிரி யாராலயும் எழுத முடியாது.” என்று முகத்தில் அடித்த மாதிரி பேசினாள்.
“இல்ல.. காவ்யா தப்பு பாரதி மாதிரி யாராலையும் சிந்திக்கவே முடியாது. அவரு எழுதுன மாதிரி யாரு எழுத முடியாது.” என்று ராஜேஷ்சும் அடித்துப் பேசினான்.
இருவருக்குமே இலக்கியம் பிடிக்கும் என்றாலும் கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் இருவருமே எதிரும் புதிருமாய் இருப்பதை அவர்கள் இருவருமே புரிந்து கொண்டனர்.
‘இவன் கூட நமக்குச் செட் ஆகுமா ஆகாத?’ என்று காவ்யாவிற்கு சந்தேகம் தோன்றியது.
‘என்ன இவ இந்தப் பேச்சு பேசற?’ என்று அவனுக்கு ஒரு பயம் தோன்றியது.
தொடரும் ..