Ep…7. யார் அது யார் அது
அலைகளின் சலசலப்பையும் உப்பு நீரின் நுரைப்பையும் வெறித்துப் பார்த்தபடி காதலர்கள் இருவரும் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர்.
எங்கிருந்தோ வந்த மல்லிகைப்பூவின் வாசனை அவர்களின் நாசியைத் துளைத்தது. இது வழக்கமான காதலர்களின் சந்திப்பாக இருந்திருந்தால் ,மான்யா இன்நேரம் சுபோத்திடம் மல்லிகைப்பூ கேட்டு அடம்பிடித்து இருப்பாள்.
ஆனால், அவள் தற்பொழுது மல்லிகையின் மனத்தை நின்று நிதானித்து சுவாசிக்கக்கூடிய மனநிலையில் கூட இல்லை .
தன் வாழ்க்கை இனி என்ன ஆகும். காரணமே இன்றி காதலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய் தன் காதலை எதிர்க்கிறாளா..? அல்லது அவளுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அவளை எதிர்க்க வைக்கிறதா ..?
ஸ்ரீபாத், ஜீவநந்தினிக்கு எப்படி தெரியும்.? ஸ்ரீபாத் பிரபலமான நடிகர் ,ஜீவ நந்தினியும் ஒரு காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவள் தான். ஆனால், அவள் ஸ்ரீபாத்தின் திரைப்படங்களில் நடித்ததாக தன்னிடம் ஒரு முறை கூட கூறியதில்லை .ரசிகை என்றால் கூட இவ்வளவு தூரம் துயரம் வருமா? இல்லை இருவருக்குமிடையே வேறு ஏதோ இருக்கிறது. அதனால் தான், ஸ்ரீபாத்தின் மரணத்திற்கு இவ்வளவு துன்பப்படுகிறாள்.?எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வயோதிகனை கண்டு தன் தாய் ஏன் அவ்வளவு பதற்றமடைந்தாள்.? ஏன் பயந்து ஓடி வந்தாள் .? இதுபோன்ற கேள்விகளால் மான்யா சிறகு உடைந்து பறக்க இயலாத பறவை போல் தத்தளித்துக் கொண்டிருந்தாள். மான்யாவின் மனநிலை இப்படி என்றால் சுபோத் , திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்ட குழந்தை போன்று திணறிக் கொண்டிருந்தான்.
சுபோத்,மான்யாவிடம் திரும்பி ,
” மானு….”என்று பலவீனமான குரலில் மான்யாவை அழைத்தான்.
மான்யா குழப்பத்தோடு சுபோத்தை பார்த்தாள் .
” என்னமோ நடக்குது. மானு…என்னனு த புரியல !” அழுது சிவந்த கண்களோடு கலங்கிய குரலில் கூறினான் சுபோத்.
அவள், அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் அவன் கண்களையே உற்று பார்த்தாள்.
பிறகு,
” சுபோத்…ஒரு விஷயம் சொல்லணும் .” என்று மெல்லிய குரலில் மான்யா ஆரம்பித்தாள்.
அவனும் சொல்லு என்பதுபோல் தலையசைத்துவிட்டு, மேற்கில் நிகழ்ந்து கொண்டிருந்த பகலிரவு சங்கமத்தை ரசிக்க மனமின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
மான்யா, ஸ்ரீபாத்தின் மரணத்தில் ஜீவநந்தினி நடந்து கொண்ட விதத்தையும் வத்தலகுண்டு வாசு என்னும் பெரியவரைக் கண்டு பயந்து அவசரமாய் தன் வீட்டிற்கு ஓடியதையும் எந்த ஒரு காரணமும் கூறாமல் தங்கள் காதலை எதிர்ப்பதையும் சுபோத்திடம் கூறி வருந்தினாள்.
” கவலைப்படாத உங்க அம்மாவ ஈசியா சமாளிச்சுடலாம் .ஆனா …” என்று நிறுத்தினான் சுபோத்.
” ஆனா என்ன? ” மான்யா கேட்டாள்.
” எங்க அம்மாவ எப்படி சமாளிக்கிறதுனு தான் புரியல…?” சுபோத் கூறினான்.
” உங்க அம்மாவும் நமக்கு அகைன்ஸ்ட்ட இருக்காங்களா? ” மான்யா கவலையோடு கேட்டாள் .
” அவங்க மைண்ட்ல என்ன ஐடியா வச்சிருக்கானே தெரியல ?.அப்பா போன வருத்தம் கொஞ்சம் கூட இருக்கிற மாதிரியே தெரியல? எனக்கு என்னனு இருக்காங்க, அவங்க பாட்டுக்கு, அவங்க வேலையை பாத்துக்கிட்டு, ஹாப்பியா டைம் ஸ்பென்ட் பண்ணிக்கிட்டு, ஒன்னுமே புரியல மானு.. என்ன சுத்தி என்னமோ நடக்குது, என்னனு தான் தெரியல? ” மிகுந்த மன வேதனையோடு சுபோத் கூறினான்.
என்ன பெண் இவள்? அது எப்படி கணவனின் மரணத்திற்கு கூட வருந்தாது இருக்க முடியும் .?
என்று மான்யா சிந்திக்க,
” மானு …ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் .” என்று சுபோத்தே தொடர்ந்தான் .
என்ன என்பது போல் மான்யா ,அவனை பார்க்க,
” அன்னிக்கு அப்பாவோட டெத்ல சுபிக்ஷா யாரோ ஒருத்தர பார்த்தாளாம் ஆள் கொஞ்சம் ஹட்டா ,கருப்பா வேற மாதிரி இருந்தானாம். அவன இதுக்கு முன்னாடி, அப்பா கூடயோ என் கூடயோ பார்த்ததே இல்லன்னு சொன்னா .” என்று சுபோத் நிறுத்திவிட்டு ஏதோ சிந்தித்தான்.பிறகு,
” மானு…..
நீ ஏதோ பேர் சொன்னியே… என்ன பெயர் அது ?
உங்க அம்மா கூட பார்த்து பயந்து ஒடுனாங்கனு சொன்னியே ..?” என்று சுபோத் கேட்டான் .
” வத்தலகுண்டு வாசு … பழைய படத்தில்லாம் மேனேஜர வேலை பண்ணி இருக்காரு நினைக்கிறேன். அப்பாக்கு கூட தெரிஞ்சுக்கலாம் .” மான்யா கூறினாள்.
” அப்படின்னா அந்த ஆளுக்கும் அப்பாவுடைய டெத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா…?” சுபோத் தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை மான்யாவிடம் கேட்டான் .
இருவருக்கும் எதுவும் புரியாமல் சற்று நேரம் குழம்பினர். ஸ்ரீபாத்தின் மரணத்திற்கும் ஜீவநந்தினியின் அழுகைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் .? தன்னுடைய தந்தையின் மரணத்தில் சுபிக்ஷா பார்த்த அந்த நபர் யாராக இருக்கக்கூடும். வத்தலகுண்டு வாசு என்று யாரோ ஒரு பெரியவரின் பெயரை மான்யா கூறினாலே அவரை சென்று சந்தித்தால் என்ன என்று சுபோத்துக்கு தோன்றியது .
அவன் தன்னுடைய எண்ணத்தை தன் காதலியிடம் அப்படியே வெளிப்படுத்தினான்.
” நல்ல ஐடியா சுபோத். நான் கூட அத பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன். நம்ம இப்பவே போய் மீட் பண்ணலாமா “மான்யா பரபரப்போடு கேட்டாள் .
” முதல்ல அவர் யாரு என்னன்னு விசாரிப்போம். அட்ரஸ் போன் நம்பர் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டு பொறுமையா போய் பார்ப்போம். ” சுபோத் நிதானமாய் கூறினான் .
மான்யாவிற்கும் அவன் கூறுவது சரி என்று தோன்ற , இசைவாய் தலையசைத்தாள்.
காதலர்கள் இருவரும் மேலும் சற்று நேரம்,தாங்கள் தொடங்கவிருக்கும் புதிய திரைப்படத்தை பற்றி பேசிவிட்டு, கடற்கரை மணலில் மெல்ல எழுந்து நடந்து தங்களுடைய வாகனத்தை நோக்கி சென்றனர்.
” ஓகே .. நா எல்லா டீட்டைல்சையும் கலெக்ட் பண்ணிட்டு, உனக்கு போன் பண்றேன் .” சுபோத், மான்யாவிடம் கூறினான் .
” ஓகே நான் கிளம்புறேன். ” என்றபடியே மான்யா தன்னுடைய கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தாள் .
சுபோத்தும் தன்னுடைய வாகனத்தில் ஏறிக்கொண்டு கிளப்பினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே கையசைத்து கொண்டு மெல்ல தங்களுடைய வாகனத்தை செலுத்தினர் .
அவர்கள் செல்வதை சற்று தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த கருத்து பெருத்த உருவமானது. அவசரமாய் அங்கிருந்து கிளம்பியது.
வீட்டுக்கு சென்றதும் சுபோத்தின் தங்கை அவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தாள்.
தொடரும் …
by மகிழம் பூ