அத்தியாயம் 16
தன் அறைக்குள் சென்று விக்ரம் தன்னுடைய உடைமைகளையும் மற்றும் அஞ்சலி ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த அந்த சின்ன ட்ராவல் பேக்கையும் எடுத்துக் கொண்டு வெளிய வந்தான். அவனுடைய அம்மா பார்வதி அப்போதும் அஞ்சலியை வாய்க்கு வந்தபடி வெளியே நின்று திட்டிக் கொண்டிருந்தாள்.
தாயை பிரிந்த நாய்க்குட்டி மழையில் தனியாக உடல் நடுங்க ஒடுங்கிப் நிற்பதுபோல அஞ்சலி நடுநடுங்கி போய் சுவரில் ஒட்டி நின்று கொண்டிருந்தாள். போகிற வருகிறவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என்று எல்லோரும் நின்று அவளை வேடிக்கை பொருளாக பாவித்து தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்து பேசி சிரித்தபடி இருந்தனர்.
அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பார்வதி குடும்ப மானம் பறிபோவதையும் உணராமல் தன்னுடைய போக்கில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி மருமகளை திட்டிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் சலிக்க முடியாத பரந்தாமன் மொட்டை மாடியில் போய் தம்மடித்துக் கொண்டிருந்தார்.
விக்ரம் கோபத்தோடு வெளியே வந்து அஞ்சலியின் கையை இறுகப்பற்றிக் கொண்டு, “சாரி அஞ்சலி நான் நம்பி கூட்டிட்டு வந்தேன் ஆனா இங்க இந்த மாதிரி நிலைமை மாறும் நெனச்சு பாக்கல சாரி வா!” என்று மென்மையான குரலில் அவளிடம் சொல்லிவிட்டு வீதியில் போய்க் கொண்டிருந்த ஒரு ஆட்டோவை வழிமறித்து அதில் அவளை ஏற்றினான்.
அஞ்சலியின் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அவள் பார்வதி திட்டியதற்காக அழுகிறாளா? அல்லது விக்ரம் தன் மீது காட்டும் கரிசத்திர்க்காக அழுகிறாளா?
அல்லது விக்ரம் குடும்பத்தையே எதிர்த்துக்கொண்டு தனக்காக இப்படி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டானே என்று வேதனை தாழாமல் அழுகிறாளா? என்று விக்ரமிற்கு புரியவில்லை. அவனுடைய மென்மையான கரங்கள் அஞ்சலியின் தளிர் போன்ற சின்ன கையை மெலிதாக தடவி கொடுத்தது.
“அஞ்சலி எதுக்காக அழற?” என்றான். அஞ்சலி அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தாள். பிறகு தன்னுடைய கண்ணீரை தானே துடைத்துக்கொண்டு ஆட்டோவின் பிங்க் சீட்டில் சாய்ந்து மெதுவாக கண்களை மூடினாள்.
அவர்கள் போய்க் கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று நிற்கவும், “என்ன ஆச்சு?” என்று டிரைவரிடம் விக்ரம் புரியாமல் கேட்டான்.
“எவனோ ஒருத்தன் ஆட்டோவுக்கு குறுக்கால டூவீலர கொண்டு வந்து விட்டிருக்கான் சார்.” என்று கோவமாக பதில் சொன்ன ஆட்டோ டிரைவர் கீழே இறங்கவும், விக்ரமும் தன்னுடைய தலையை வெளியே நீட்டி பார்த்தான். வழிமறித்தது மதிதான் என்றதும் அவன் மந்திற்க்குள் நண்பன் மீது மரியாதை தோன்றியது. ‘நீயாச்சும் என்ன புரிஞ்சி கிட்டயே?’ என்று மகிழ்ந்தான்.
டூவீலரை நிறுத்திவிட்டு மதி அவர்களை பார்த்து வருவதை தெரிந்து கொண்டு, “அண்ணே அவர் என்னோட பிரண்டு தான் என்ன பாக்க தான் வந்துட்டு இருக்காரு.” என்று சொல்லி அவனும் கீழே இறங்கினான். டிரைவர் நண்பன் என்று அறிந்ததும் அமைதியாக மீண்டும் தன்னுடைய சீட்டில் உட்கார்ந்து விட்டான்.
“விக்ரம் நான் உன்கிட்ட பேசணும் நீ நேரா அந்த பொண்ணு கூட்டிட்டு என்னோட வீட்டுக்கு வா.” என்று ரத்தின சுருக்கமாக மதி பேசவும் விக்ரமிற்கு கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது.
“தேங்க்யூ!” என்று விக்ரம் அவனுடைய கையை கொத்தாக பிடித்தான்.
“நம்ம ரொம்ப நேரம் ரோடுல்ல நின்னு பேச முடியாது.” என்று சொன்ன மதி தன்னுடைய பைக்கை பார்த்து விக்ரமின் கையை விளக்கி விட்டு நடந்தான். விக்ரம் மீண்டும் ஆட்டோவில் ஏறி உட்காருவும் அந்த ஆட்டோ இப்பொழுது மதியின் மோட்டார் பைக்கை பின் தொடர்ந்தது.
மதியின் வீட்டை அடைந்து அவர்கள் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு மதியின் வீட்டுக்குள் நுழைந்தனர். மதியுடைய வீடு சிறிய வீடு தான் அவன் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தான். கல்லூரி விடுதியில் தங்கி படித்தான். படிப்பை முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்து நாளில் இருந்து இன்று வரை அவன் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் வருடத்திற்கு ஒரு முறையோ இருமுறையோ வந்து அவனோடு சில நாட்கள் தங்கி விட்டு போவார்கள்.
மதி என்ன தான் பேச்சுலராக இருந்தாலும் தன்னுடைய வீட்டை மிக சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருந்தான்.
“வாங்க!” என்று அவர்கள் இருவரையும் வரவேற்ற மதி,”அஞ்சலி அந்த ரூம்ல நீ போய் ரிப்ரஸ் ஆயிட்டு வா. நம்ம எல்லாரும் பக்கத்துல எங்கயாவது போய் சாப்பிட்டு வரலாம்.” என்று சொல்லவும் அஞ்சலி கொஞ்சம் தயங்கினாள். பிறகு விக்ரம் அவளை பார்த்து தலையசைக்கவும் அவள் மெதுவாக அவன் காட்டிய அறைக்குள் போனாள்.
அஞ்சலி அறைக்குள் சென்று சில நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் அமைதியாக தான் இருந்தனர். பிறகு மதி தான் மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
“டேய் விக்ரம் நான் இதுக்காக தான் சொன்னேன் அந்த பொண்ண ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடலாம்னு நீ தான் கேட்கல.
இது எல்லாத்தையும் விட அந்த பொண்ண என்னாலயே ஏத்துக்கவே முடியல என்னாலயே ஏத்துக்க முடியாதப்போ உங்க அம்மாவால எப்படிடா ஏத்துக்க முடியும்?
நீ ஒரு டாக்டர் உன் ஸ்டேட்டஸுக்கு ஒரு படிச்ச டாக்டர் பொண்ணு தான் கரெக்ட்டா இருப்பா அப்படி இல்லன்னா கூட ஈக்குவலா ஒரு எம்பிஏவோ எம்சிஏவோ இல்லனா ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் பொண்ண பார்த்து நீ கல்யாணம் பண்ணி இருந்த உங்க அம்மா கண்டிப்பா இந்த கல்யாணத்தை எதிர்த்திருக்க மாட்டாங்க. உங்க அம்மா என்கிட்ட எத்தனையோ தடவை சொல்லி இருக்காங்க டா என் பையன் காதலிச்சா நான் கண்டிப்பா மறுப்பு சொல்ல மாட்டேன்னு.” என்று மதி பேசிக்கொண்டே போகவும், “என்னடா பேசுற அவ இருந்த சூழ்நிலை அம்மாவுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா உனக்கு தெரியாதா அவ பாவம் டா எந்த மாதிரி ஒரு நெருக்கடியான நிலைமையில நின்னுட்டு இருந்தானு உனக்கு நல்லாவே தெரியும் தெரிஞ்சும் நீ இப்படி பேசுறது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.
என்ன சொன்ன அம்மா நான் காதலிச்சிருந்தா கண்டிப்பா தடை சொல்லி இருக்க மாட்டாங்களா?
ஆனா அந்த பொண்ணு படிச்ச இன்ஜினியராவோ டாக்டராவோ இருந்திருந்தான்னா. அதுக்குள்ள முக்கியமா நீ ஒரு விஷயத்தை மறந்துட்டடா எங்க அம்மாவுக்கு ஸ்டேட்டஸ் தான் முக்கியம் தன்னுடைய ஸ்டேட்டஸுக்கு ஏத்த பொண்ண பையன் காதலிக்கணும் அந்தப் பொண்ணு வெளியில நாலு பேரு கிட்ட சொல்லிக்கிற மாதிரியான சீர்வரிசை கொண்டு வரணும் அப்படிப்பட்ட பொண்ணா இருந்தா அஞ்சலிய கூட அவங்க கண்டிப்பா ஏத்துக்கிட்டு இருந்திருப்பாங்க. அஞ்சலி உடைய தோற்றமும் அவளுடைய டிரஸ்ஸுமே அவ ஏழைன்னு நல்லாவே எங்க அம்மாவுக்கு காட்டி கொடுத்துருச்சு. அதனால தான் அவங்க இந்த ஆட்டம் ஆடுனாங்கனு என்னால அதைத்தான் ஜீரணிச்சுக்கவே முடியல.
தன்னுடைய பையன் சொல்லாம கொள்ளாம முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கானா அதுக்கு ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்குன்னு அவங்க யோசிக்கவே இல்லடா பணத்துக்கும் அந்தஸ்துக்கும் அவங்க கொடுத்த முக்கியத்துவத்தை தன்னுடைய மகனுக்கும் ஒரு அனாதை பெண்ணுடைய எதிர்காலத்துக்கும் அவங்க கொடுக்கவே இல்ல மனிதர்களை விட பணமும் காசும் அந்தஸ்துவும் ரொம்ப முக்கியமா போயிடுச்சு அவங்களுக்கு.
சரி பரவாயில்ல அவங்களை பத்தி பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல என்ன நம்பி அஞ்சலி வந்து இருக்கா அவள நல்லா பாத்துக்க வேண்டியது என்னுடைய கடமை.” என்று விக்ரம் தன்னுடைய கோபமான வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அஞ்சலி இருக்கும் அறையை திரும்பிப் பார்த்தான்.
விக்ரமுடைய மனநிலையை மதியால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை.
“டேய் விக்ரம் உங்க அம்மாவும் அப்பாவும் உன்னை எவ்வளவு ஆச ஆசையா வளத்தாங்க நீ டாக்டராகணுன்னு உன்ன விட உங்க அம்மா தான் ரொம்ப ஆசை பட்டாங்க. ஆனா நீ என்னடா அவங்களை எடுத்துறிஞ்சு பேசுற அவங்க கோவப்பட்டாங்கன்னு சொல்லி வீட்ட விட்டு அந்த பொண்ண கூட்டிகிட்டு தனியா வந்துட்டயே?
அவங்க மனசு எவ்வளவு வேதனை பட்டு இருக்கும் நீ பண்ணது தப்பு டா நீ உங்க அம்மாவுக்கு ஒரே பையன் உன்மேல அவங்க ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தாங்க. அவங்களுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணுது பெரிய தப்பு.
அட்லீஸ்ட் நீ இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு போன்லையாவது அவங்க கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கணும் ஆனா நீ எதுவுமே பண்ணல திடுதிப்புன்னு அந்த பொண்ணு கூட்டிட்டு வந்து நின்னதை அவங்களால தாங்கிக்கவே முடியல இப்ப கூட நீ பெரிய தப்பு தானே பண்ணிட்டு இருக்க. நீ உங்க அம்மா கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கணும். அவ யாரு அவளுடைய சூழ்நிலை என்னன்னு நீ புரிய வச்சிருக்கணும். அத விட்டுட்டு நீ இப்படி பேசுறது ரொம்ப தப்பு டா இது சுயநலமா எனக்கு தோணுது.” என்று மதி தன் மனதில் பட்டதை பேசினான்.